காவல்துறையினரின் பணிப் பதிவேடுகள் என்ன? பணியில் சேரும் அனைத்து காவலர்களுக்கும் கீழ்க்காணும் ஆவணங்கள் கொடுக்கப்படும்.

1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity Card)

2. மருத்துவ சரித்திர பதிவேடு (Medical History Sheet)

3. தண்டனை பதிவேடு (Defaulter Sheet)

4. சிறு பணிப் புத்தகம் (Small Service Book)

5. குறிப்பேடு (Note Book)

1. புகைப்பட அடையாள அட்டை :- PSO - 294

இந்த அடையாள அட்டை சன்னத் எனப்படும் அட்டைக்குப் பதிலாக தற்போது வழங்கப்படுகின்றது. இதில் காவலரின் பெயர், பொது எண், புகைப்படம், மாவட்டம் மற்றும் பணிபுரியும் பிரிவு பதவி நிலை, பணிக்கு அமர்த்தப்பட்ட நாள், பிறந்த தேதி, இரத்த வகை பிரிவு, அங்க மச்ச அடையாளக் குறிகள், அட்டை வழங்கப்பட்ட நாள் ஆகியவை குறிக்கப்பட்டு வழங்கும் அலுவலரின் கையொப்பம் இருக்கும். பணியிலிருந்து தற்காலிகமாக அல்லது நிரந்தர நீக்கம் செய்யப்பட்டால் அடையாள அட்டையை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். சீருடை அணியாத நேரத்தில் பணியாற்றுகையில் காவல்துறை அலுவலர் என அடையாளம் காண இந்த அட்டை பயன்படுகிறது. இப்போது இந்த அடையாள அட்டையானது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை ஊழியர்களுக்கும் காவல்துறை இயக்குனர், சென்னை அவர்களின் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகின்றது.

2. மருத்துவ சரித்திர ஏடு :- PSO- 295

மருத்துவ சரித்திர ஏட்டில் காவலரின் பெயர், எண், பதவிநிலை மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும். உடல் நலக்குறைவிற்கென மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்லும் போது இதனை காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடமிருந்து பெற்றுச் செல்ல வேண்டும். இதில் மருத்துவ அலுவலர் காவலரின் நோய், அதன் தன்மை போன்ற விபரங்களை பதிவு செய்வார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை (Biennial Medical Examination) செய்து கொண்டு அதன் விபரங்களையும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுகாதார ஆய்வாளர் அம்மை தடுப்பூசி போடும்போதும் இப்புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

3. தண்டனை பதிவேடு :- PSO- 290

இதில் தவறுகளையும் அதற்காக அளிக்கப்பட்ட தண்டனைகளையும் பதிவு செய்ய வேண்டும். மிகச் சிறு தண்டனைகளையும், நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனைகளையும் (Deferred Punishment) இப்புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை.

4. சிறு பணிப் புத்தகம் :- PSO- 293 & FORM 40

இப்பதிவேட்டில் காவலரின் பெயர், எண், பதவிநிலை, முகவரி, சாதி, வயது, முன்னர் செய்து வந்த பணி, பணியில் சேர்ந்த நாள், உடல் அளவுகள், ஊதிய விபரங்கள், அதிகரிப்பு ஊதியம், நற்பணிப் பதிவுகள், வெகுமதிகள், இடமாற்றம், பதவி உயர்வு விபரங்கள், அரசு உடைமைப் பொருட்கள் வழங்கிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்படும்.

5. குறிப்பேடு:- PSO - 710 & 711

அலுவலில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு காவலருக்கும் இத்தகைய குறிப்பேடு வழங்கப்படும். இதில் காவலர் தான் பணிபுரிந்த இடங்கள், சேகரித்த தகவல்கள் போன்ற விபரங்களை உடனுக்குடன் எழுத வேண்டும். அலுவலுக்குச் செல்லும் போது இதனை எடுத்துச் சென்று விபரங்கள் எழுதி பின்னர் நிலைய எழுத்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலுக்கு அனுப்பும் பொழுதும், திரும்ப வந்து அறிக்கை செய்யும் பொழுதும் அலுவலர் கையொப்பம் இட வேண்டாம். குறிப்பேட்டினை காவலர் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குறிப்பேட்டினை வழங்கும் போது குறிப்பேட்டின் எண், மொத்த பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறித்து காவல் நிலைய பொறுப்பு அலுவலர் சான்றொப்பம் அளிக்க வேண்டும். பூர்த்தியான அல்லது பயன்படுத்தி நிறுத்தப்பட்ட குறிப்பேடுகள் காவல் நிலையத்தில் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். அதன்பிறகு உரிய ஆணை பெற்று அழித்து விடலாம். புலனாய்வு அலுவலர்கள் பணியிட மாறுதலில் செல்லும்போது தங்கள் குறிப்பேடுகளை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக பராமரிக்க விட்டுச் செல்ல வேண்டும்.